×

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ஆண்டுதோறும் 6.32 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை: மருத்துவர்கள் அசத்தல்

பெரம்பூர்: பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ஆண்டுதோறும் 6.32 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் அசத்தி உள்ளனர். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை, கடந்த 1986ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 37 வருடங்களாக 100 படுக்கை வசதிகளுடன், சிறிய அளவில் செயல்பட்ட இந்த மருத்துவமனையை சீரமைத்து, பெரிய மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

அதன்பேரில், திமுக ஆட்சி அமைந்த உடன் 300 படுக்கை வசதியுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, புதுப்பொலிவுடன் 13.8.2021 அன்று பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை புனரமைப்பதற்கு முன்பு, நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் 1,500 புற நோயாளிகள் வீதம், வருடத்திற்கு 4.5 லட்சம் புற நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், மருத்துவமனை புனரமைக்கப்பட்ட பின்பு ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,500 புற நோயாளிகள் வீதம் ஆண்டுக்கு 6 லட்சம் புறநோயாளிகள் தற்போது பயனடைந்து வருகின்றனர். இதேபோல், முன்பு தினசரி 60 முதல் 70 வரை உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று, ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் மட்டுமே பயனடைந்து வந்தனர்.

தற்போது, நாளொன்றுக்கு 100 முதல் 170 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று, ஆண்டிற்கு 32,000 உள்நோயாளிகள் நல்ல முறையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு தற்போது, 25 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 12 படுக்கை வசதியுடன் அதிநவீன சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் 75 ஆயிரம் கொரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 2000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

மேலும் 10 படுக்கை வசதிகள் கொண்ட டயாலிசிஸ் பிரிவு, 4 அறுவை சிகிச்சை அரங்குகள், 24 மணி நேரமும் இயங்கும் அதிநவீன ஆய்வகம், எக்ஸ்ரே மற்றும் இசிஜி பிரிவுகள் உள்ளிட்டவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
2022-23ம் ஆண்டு டயாலிசிஸ் பிரிவில் 3 ஷிப்டுகளில் ஒரு டயாலிசிஸ் செய்ய 4 மணி நேரம் என்று கணக்கில் 6,500 டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,235 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை, குடல் இறக்கம், கர்ப்பப்பை அகற்றம் போன்ற அறுவை சிகிச்சைகள் திறம்பட செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மாதம் ஒன்றிற்கு சுமார் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் வருடத்திற்கு 55 ஆயிரம் நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டிற்கு 5000 விபத்து மற்றும் அவசர சிகிச்சை நோயாளிகள், 250 இதய நோய் நோயாளிகள், 400க்கும் மேற்பட்ட விஷம் அருந்திய நோயாளிகள், 250 பக்கவாத நோயாளிகள், 200 தீக்காய நோயாளிகள் என இந்த சதவீத அடிப்படையில் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். மேலும், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு, செப்டம்பர் 2022 முதல் இயங்கி வருகிறது. இந்த அரங்கில் 750க்கும் மேற்பட்ட பெரிய அறுவை சிகிச்சைகளும், 6,086 சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2023ம் ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஜூலை வரை 66 ஆயிரத்து 859 சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

வருடத்திற்கு 2000 நோயாளிகளுக்கு கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளும். 4000 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையை புனரமைப்பதற்கு முன்பு இரண்டு லட்சம் ஆய்வக பரிசோதனைகளும், 5 ஆயிரம் எக்ஸ்ரே, 6000 இசிஜி எடுக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனை தரம் உயர்த்தபட்ட பின்பு, வருடத்திற்கு 20 ஆயிரம் எக்ஸ்ரே, 25 ஆயிரம் இசிஜி, 3 ஆயிரம் எக்கோ, 10,000 பேருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 2000 நோயாளிகளுக்கு காசநோய் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, வழிகாட்டி நெறிமுறைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. 6 கே.எல்.ஆக்சிஜன் வங்கி நிறுவப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் குழாய் மூலம் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஹேமலதா கூறுகையில், ‘‘சிறிய அளவில் பொதுமக்கள் வந்து சென்ற மருத்துவமனை தற்போது 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் ஆரம்பத்தில் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் தற்போது ஆவடி, அம்பத்தூர், அரக்கோணம், பூந்தமல்லி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.

வெளியே ஸ்கேன் செய்ய ரூ.1500 வரை செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், இங்கு இலவசமாக ஸ்கேன் எடுப்பதால் தினமும் ஸ்கேன் எடுக்க ஏராளமானவர்கள் வருகின்றனர். தற்போது மருத்துவமனை பின்புறம் ரூ.71.81 கோடி செலவில் 3 மாடி கொண்ட பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சிகிச்சை முறைகளும் வழங்கப்பட உள்ளன. இதற்கு முன்பு கே.கே.நகர் பகுதியில் மட்டுமே இந்த மாற்றுத்திறனாளிக்கான அனைத்து சிகிச்சை வசதிகளும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பகுதியில் மாற்றுத்திறவங்களுக்கான சிகிச்சை முறைகள் அனைத்தும் வழங்கப்படும் பட்சத்தில் வடசென்னை மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்து மாற்றுத்திறனாளிகளை கே.கே.நகருக்கு அழைத்துச் செல்லாமல், கொளத்தூர் பகுதிக்கு வருவார்கள்.

மேலும் இந்த புதிய கட்டிடத்தில் மக்களை தேடி மருத்துவம், எம்ஆர்ஐ ஸ்கேன், பிரசவங்களுக்காக பிரத்யேக வசதி, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை அரங்கம், முழு உடல் பரிசோதனை மையம், மருந்துஅறை, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் வளாகம், குழந்தைகள் வார்டு போன்ற பல வசதிகள் செய்யப்பட உள்ளன. முன்பு இருந்ததைவிட தற்போது பல மடங்கு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் இது மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார்.

The post பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் ஆண்டுதோறும் 6.32 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை: மருத்துவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Periyar Nagar Govt Hospital ,Periyar Nagar Government Hospital ,Chennai… ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...